சாரை காப்பாற்றும் சார் அடையாளப்படுத்தப்படுவார் உதயகுமார் காட்டம்
மதுரை: ''அடுத்தாண்டு பழனிசாமி ஆட்சிக்கு வருவார். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அந்த சாரை கூண்டில் ஏற்றுவார். சாரை காப்பாற்றும் சாரையும் நாட்டுக்கு அடையாளப்படுத்துவார்,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலை பாலியல் சம்பவத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட மாணவிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் இன்னும் பதில் கிடைக்காத சில கேள்விகள் உள்ளன.குற்றவாளி ஞானசேகர் வீட்டில் பிரியாணி சாப்பிடும் வகையில் நெருக்கம் காட்டிய அமைச்சர், சென்னை துணை மேயர் ஆகியோரை விசாரிக்காதது ஏன். வழக்கின் மூல கேள்வியான 'யார் அந்த சார்' என்பது அப்படியே இருக்கிறது. ஞானசேகரனை தவிர யாரும் குற்றவாளி இல்லை என்று போலீசார் அவசரமாக கூறியது யாரை காப்பாற்ற. காட்சிகள் மாறும். விரைவில் பழனிசாமி முதல்வராக வருவார். அப்போது அந்த சார் யாராக இருந்தாலும் கூண்டில் ஏற்றப்படுவார். அந்த சாரை காப்பாற்றிவரும் சாரும் நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தப்படுவார்.சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என்று எதை கேட்டாலும் திசை திருப்பும் வகையிலும், மடைமாற்றம் செய்யும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. தமிழக மக்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இன்று உதயநிதியின் 'பாசப்பறவைகள்' மீது அமலாக்க துறை சோதனை செய்துள்ளது. அவர்களை வலை வீசி பிடித்தால் உதயநிதி முகம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.