திறக்காத நெல் கொள்முதல் மையம் விவசாயிகளுடன் போராட்டம் உதயகுமார் எச்சரிக்கை
மதுரை: ''மதுரை மாவட்டத்தில் நெல்கொள்முதல் மையங்களை திறக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார். மதுரையில் அவர் கூறியதாவது: 58 கால்வாய் திட்டம் என்பது 45 ஆண்டுகால உசிலம்பட்டி மக்களின் கனவு திட்டம். அதை நிறைவேற்ற பழனிசாமி ஆட்சியில் 5 முறை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 58 கால்வாய் திட்டத்திற்கும் திருமங்கலம் பிரதான கால்வாய் திட்டத்திற்கும் தண்ணீர் திறக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். தற்போது அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் மழையால் நெல்மணிகள் சேதமடைந்து வருகின்றன. ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகம் 48 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவித்து இதுவரை பத்துதான் திறந்துள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க தி.மு.க., அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு வேண்டிய உரிய நிவாரண உதவியும், தேவையான கொள்முதல் நிலையங்களையும் அரசு திறக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினார்.