உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கார்களின் அணிவகுப்பால் நடக்க முடியல: அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

கார்களின் அணிவகுப்பால் நடக்க முடியல: அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நடந்து செல்வதற்கு இடமின்றி ரோட்டின் இருபுறங்களிலும் கார்கள், வாகனங்களை நிறுத்தி வைப்பதால் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. வெளியூருக்கு செல்லும் டூவீலர் ஓட்டிகள், கார் வைத்திருப்போர் அரசு மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்தி விட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் எடுக்கின்றனர். இதனால் வார்டுகளின் பக்கம் திரும்பும் இடமெல்லாம் டூவீலர், கார்கள் நின்றதால் மருத்துமவனை பணியாளர்களின் வாகனங்களுக்கு தனி ஸ்டிக்கர் வழங்க பிப்ரவரியில் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்தது. நர்ஸ்கள், பயிற்சி மாணவர்கள், டாக்டர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் டூவீலர்கள் கணக்கெடுக்கப்பட்டன. மே மாதத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் 200 கார்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தனியாக ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. டூவீலர்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆட்டோ, கார், லோடு வாகனங்கள் மருத்துவமனையில் வார்டு ஓரமாக நிறுத்தப்படுகின்றன. செக்யூரிட்டிகள் கண்காணித்து 'மைக்' மூலம் சத்தமாக அறிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஸ்டேஷன் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இருபக்கமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ரோட்டின் நடுவில் நோயாளிகள் நடந்து செல்லும் போது பின்பக்கமிருந்து வரும் வாகனங்கள் தொடர்ந்து 'ஹாரன்' எழுப்புகின்றன. வீல்சேர், ஸ்டிரெச்சரில் ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு நோயாளிகள் கொண்டு செல்வதும் சிரமமாக உள்ளது. மருத்துவமனை நுழைவுவாயிலில் இருந்து ஒருபக்க வரிசையில் மட்டும் கார்கள் நிறுத்தும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை