திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
வாடிப்பட்டி : திருப்பரங்குன்றம் ஒன்றியம் மேலமாத்துார் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதமாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராததால் குழந்தைகள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.இக்கிராமத்தில் உள்ள நாடார் தெரு அங்கன்வாடி மையத்தில் 50 குழந்தைகள் வரை படித்தனர். இதனால் இடநெருக்கடி ஏற்பட்டது. பின் 25 குழந்தைகளுடன் கிராம இ-சேவை மைய கட்டடத்தின் முன் பகுதியில் புதிய மையம் செயல்பட துவங்கியது. இப்பகுதிக்கு என புதிதாக அங்கன்வாடி மையம் மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.16.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இன்று வரை பயன்பாட்டிற்கு வராததால், அடிப்படை வசதி இல்லாத சேவை மைய கட்டடத்தில் குழந்தைகள் பயில்கின்றனர். எனவே புதிய கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.