உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய் தடுப்பை சீரமைக்க வலியுறுத்தல்

கால்வாய் தடுப்பை சீரமைக்க வலியுறுத்தல்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் பொட்டமடையின் கால்வாய் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயி துரைப்பாண்டி கூறியதாவது: அணைப் பட்டியில் இருந்து முல்லை ஆற்றில் பிரிந்து செல்லும் வடகரை கால்வாய் பொம்மன்பட்டி, அம்மச்சியாபுரம், கருப்பட்டி, நாச்சிகுளம், சோழவந்தான் பகுதி சாகுபடிக்கு முக்கிய ஆதாரம். கால்வாயில் உள்ள மடைகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் பொட்டமடையின் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மடையில் இருந்து வெளியேறும் நீர் இரு பிரிவாக செல்லுவதற்கு கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. முறையாக பராமரிக்காததால் சேதம் அடைந்து தண்ணீர் ஒருபுற கால்வாய் வழியே மட்டும் செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் உடைந்த மரம், மண் மூடைகள், இதர பொருட்களால் தற்காலிக தடுப்பு அமைத்து 2 புறமும் தண்ணீர் செல்ல வழி அமைத்துள்ளனர். இருப்பினும் ஒருபுறமே அதிகமாக செல்கிறது. இதனால் 150 ஏக்கர் நிலம் போதுமான தண்ணீரின்றி பாதிக்கும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை