மேலும் செய்திகள்
சி.எம்.டி.ஏ., பணியிடங்கள் புதிதாக 119 உருவாக்கம்
06-Oct-2024
மதுரை: தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் திருவனந்தபுரம் ரயில்வே வாரியம் மூலம் நிரப்பப்படுவதால் ரயில்வே துறையில் தமிழர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது.ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது.கொங்கன் ரயில்வே, கோல்கட்டா மெட்ரோவை சேர்த்து, நாட்டில் மொத்தம் 19 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. அவற்றில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் 21 தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.தெற்கு ரயில்வே, நிர்வாக காரணங்களுக்காக சென்னை, திருச்சி, சேலம், மதுரை என தமிழகத்தில் நான்கு, திருவனந்தபுரம், பாலக்காடு என கேரளாவில் இரண்டுமாக மொத்தம் 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் சென்னை தேர்வு வாரியம் மூலமும், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதனால் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடியில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழர்களை பணியமர்த்த முடியாது. கேரள இளைஞர்களை இங்கு பணியமர்த்துவதால், மொழிப் பிரச்னையால் பணி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். அதனால் ஏற்படும் காலி பணியிடங்களில் மீண்டும் கேரள வாசிகளையே பணியமர்த்த வேண்டியுள்ளது.இந்தாண்டுக்கான காலிப் பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்தது. அதில் தெற்கு ரயில்வேயில், 218 ரயில் ஓட்டுநர்கள், ஆயிரத்து 111 தொழிநுட்ப வல்லுனர்கள், 773 இளநிலை பொறியாளர்கள், 143 பாராமெடிக்கல் பணியிடங்கள், ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர், சரக்கு ரயில் மேலாளர் உள்ளிட்ட தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களில் 916 என மொத்தம் மூன்றாயிரத்து 161 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் சென்னை வாரியத்தின் கீழ் இரண்டாயிரத்து 406 பணியிடங்களும், திருவனந்தபுரம் வாரியத்தின் கீழ் 755 இடங்களும் நிரப்பப்படுகின்றன.மதுரை கோட்டத்தில் குறைந்தபட்சம் 40 சதவீத காலிப் பணியிடங்கள் இருப்பதாக கருதினால் 755க்கு 300 பணியிடங்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கானது.ஆனால் அவை திருவனந்தபுரம் வாரியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழர்களின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இங்குள்ள காலி பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தில் விண்ணப்பித்தால் கேரள மாநிலத்தில் தான் அவர்களால் தேர்வு எழுத முடியும்.இத்தகைய நடைமுறை சிக்கல்களால் தமிழகத்தில் உள்ளவர்கள் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் நிலை தற்போது உள்ளது. தமிழக இளைஞர் நலனை கருத்தில் கொண்டு தமிழக எம்.பி.,க்கள் குறிப்பாக தென் மாவட்ட எம்.பி.க்கள் ஓரிரு மாதங்களில் துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப வேண்டும் என்பதே ரயில்வே வேலை தேடும் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு.
06-Oct-2024