| ADDED : ஏப் 20, 2024 05:44 AM
மதுரை லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. இதில் 61.95 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.கடந்த 3 தேர்தல்களில் பதிவானதைவிட இந்தத் தேர்தலில் மேலும் குறைவாகவே பதிவாகியுள்ளது.மதுரை தொகுதியில் 5468 ராணுவ வீரர்கள், 271 திருநங்கையர்கள் ஓட்டு உட்பட மொத்தம் 26 லட்சத்து 94 ஆயிரத்து 585 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ராணுவ வீரர்கள் தபால் ஓட்டு அளித்தனர். மற்றவர்கள் மாவட்டத்தில் 1160 மையங்களில் அமைக்கப்பட்டு இருந்த 2751 ஓட்டுச்சாவடிகளில் நேற்று ஓட்டளித்தனர்.மதுரை தொகுதியில் 542 மையங்களில் உள்ள 1573 ஓட்டுச்சாவடிகளில் 15 லட்சத்து 82 ஆயிரத்து 271 பேர் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதும் பல இடங்களில் மக்கள் ஓட்டளித்தனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். ஏற்கனவே பதிவு செய்து இருந்த முதியோர் அழைப்பின் பேரில் மாவட்ட அதிகாரிகளே அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று ஓட்டுப்பதிவுக்கு உதவினர். மாலையில் கூட்டம் அதிகம் வந்ததால் சில ஓட்டுச்சாவடிகளில் 6:00 மணிக்கு பின்பு டோக்கன் கொடுத்து பதிவு நேரத்தை நீடித்தனர்.இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓட்டு சதவீதத்தை அதிகாரிகள் கணக்கெடுத்னர். அதன்படி காலை 9:00 மணிக்கு 9.91 சதவீதம் பதிவாகி இருந்தது. காலை 11:00 மணிக்கு 22.35 சதவீதமாக உயர்ந்தது. இது மதியம் 1:00 மணி நிலவரப்படி 35.79 சதவீதமாக அதிகரித்தது. மதியம் 3:00 மணிக்கு 46.55 சதவீதம், மாலை 5:00 மணிக்கு 56.11 சதவீதம், மாலை 6:00 மணிக்கு நிறைவாக 61.95சதவீதம் பதிவானது. மாவட்ட நிர்வாகம், போலீஸ் ஏற்பாட்டால் மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் அசம்பாவிதம் நடக்காமல் ஓட்டுப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.மதுரை தொகுதியில் கடந்த 2009 தேர்தலில் 77.43 சதவீதம், 2014ல் 67.74 சதவீதம், 2019 ல் 66.02 சதவீதம் பதிவாகியுள்ளது. கடந்த 3 தேர்தல்களிலும் தொடர்ந்து குறைந்து வந்த ஓட்டுப்பதிவு, இம்முறை மாநில சராசரி (72)யையும் விடவும் வெகுவாக குறைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருப்பினும் அதிக வெயில், தொடர்ந்து 3 நாள் விடுமுறை, அரசு ஊழியர்களின் அதிருப்தி, பட்டுவாடா இல்லாதது போன்றவை காரணமாக குறைந்து இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.மதுரை, ஏப். 20-
மதுரை மாவட்டத்தில் சட்டசபை
தொகுதி வாரியாக பதிவான ஓட்டு