கழிவு நீரால் சேதாரமாகுது சேமட்டான்குளம் கண்மாய்; காப்பாற்றுங்க என கதறும் திருநகர் மக்கள்
திருநகர்: மதுரை திருநகர் சேமட்டான்குளம் கண்மாயை துார்வாரி கரையை பலப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர், நிலையூர் கால்வாய் மூலம் இக்கண்மாயை நிரப்பும். திருநகர், சுந்தர் நகர் நெல்லையப்பபுரம் ஒரு பகுதி குடியிருப்புகள், வணிக வளாகங்களின் கழிவு நீர் கண்மாயில் கலந்து தேங்கி நிற்கிறது. ஆகாயத்தாமரை செடிகள், சம்பைபுற்கள் பரவி கிடக்கின்றன. கண்மாய் கரைகளில் அப்பகுதியினர் குப்பையை கொட்டுகின்றனர். கண்மாய் சுகாதார சீர்கேடாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இக்கண்மாய் மூலம் முன்பு நுாற்றுக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. நிலையூர் கால்வாயில் நெல்லையப்பபுரம் பகுதியில் துார் வாரப்படாததால் வைகை அணை தண்ணீர் சில ஆண்டுகளாக கண்மாய்க்கு வரவில்லை. கண்மாயை உடனடியாக சீரமைக்க வில்லையெனில் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகிவிடும். கண்மாய்க்குள் செல்லும் கழிவு நீரை தடை செய்யவும், துார்வாரி ஆண்டு முழுவதும் வைகை அணை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.