உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுகளை எரித்துதான் அழிப்போம் அடம்பிடிக்குது உசிலை நகராட்சி

கழிவுகளை எரித்துதான் அழிப்போம் அடம்பிடிக்குது உசிலை நகராட்சி

உசிலம்பட்டி: 'குப்பையை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக்குவதற்கு போதுமான வசதிகள் இருந்தும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் எரித்துதான் அழிப்போம்' என உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அடம் பிடிக்கிறது. உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டுகளில் தினசரி சேரும் குப்பையை, பொதுமக்களிடம் பெறும்போதே மக்கும், மக்காத குப்பை என பிரித்து வாங்குகின்றனர். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில் வத்தலக்குண்டு ரோட்டில் யு.வாடிப்பட்டி அருகிலும், பேரையூர் ரோட்டில் மின்மயானம் அருகிலும் குப்பை சேகரிக்கும் மையங்கள் போதுமான இடவசதியுடன் உள்ளன. யு.வாடிப்பட்டி மையத்தில் போதிய இயந்திரங்களை கொண்டு வராமல் பல ஆண்டுகளாக எரித்து அழித்தனர். அப்பகுதியினர் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக தொடர் போராட்டம் நடத்தி, அங்கு குப்பை கொட்டவிடாமல் தடுத்து வருகின்றனர். பேரையூர் ரோட்டில் உள்ள மையத்தில் போதுமான இயந்திரங்கள் உள்ளது. இருப்பினும் மக்கும், மக்காத குப்பை என பிரிக்க போதிய ஆட்களை நியமிக்காமல் அப்படியே கொட்டி வருகின்றனர். இங்கு மேலும் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்படும்போது தீ வைத்து அழிக்கின்றனர். இங்கும் குப்பையில் கிளம்பும் புகையால் மக்கள் பாதிக்கப்பட்டு, அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். குப்பையை எரித்து அழிப்பதை நிறுத்தி விட்டு, முறையாக திடக்கழிவுகளை உரமாக்கவோ, அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ