காய் வாங்க வருவோர் நோய் வாங்கிச் செல்வதா கழிப்பறை பயன்பாடு என்னாச்சு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் புதிய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் காய் வாங்க வருவோர் நோய் வாங்கிச் செல்லும் இடமாக காய்கறி மார்க்கெட் மாறியுள்ளது.இவ் ஒன்றியத்தின் 27 ஊராட்சிகளின் தலைமையிடமாக கொட்டாம்பட்டி உள்ளது. வாரந்தோறும் செவ்வாய் கிழமை காய்கறி சந்தை செயல்படுகிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.இம்மக்களுக்காக ரூ.பல லட்சம் செலவில் கழிப்பறை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.கழிப்பறைக்குள் முட்செடிகளை போட்டு வைத்துள்ளனர். 'ஒதுங்க' இடம்தேடுவோர் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் சந்தை முழுவதும் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடுடன் உள்ளது. இங்கு கிடக்கும் கழிவுகளில் மொய்க்கும் ஈக்கள் காய்கறிகளையும் நாடுவதால் ஆரோக்கியமற்ற காய்கறிகளை மக்கள் வாங்கும் அவலம் நிலவுகிறது. கழிவறை பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதே இதற்கு காரணம். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதால் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ஒப்பந்ததாரர் கழிப்பறையை ஒப்படைத்ததும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.