உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெற்பயிரில் இலைச்சுருட்டு புழு தாக்குதலுக்கு என்ன தீர்வு

நெற்பயிரில் இலைச்சுருட்டு புழு தாக்குதலுக்கு என்ன தீர்வு

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். ஆங்காங்கே பயிர்களில் இலைச் சுருட்டு புழு தாக்கம் காணப்படுகிறது. இப்புழுக்களால் பாதித்த பயிர்களில் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு இருக்கும். புழுக்கள் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்த தாக்கம் இருந்தால் டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44 மற்றும் 51 வது நாட்களில் ஏக்கருக்கு மொத்தம் மூன்று முறை 5 சிசி என்ற அளவில் விட வேண்டும். வயல்களில் தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். களைகளை நீக்கி வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவிகிதம் ஆகியவற்றை எக்டேருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும்.அல்லது எக்டேருக்கு பாசலான் 35 இசி 1500 மி.லி., அல்லது குளோர் பைரிபாஸ் 20 சதவிகிதம் இசி 1250 மி.லி., அல்லது அசிபேட் 75 சதவிகிதம் எஸ்பி 1கிலோ அல்லது அசாடிராக்டின் 0.03 சதவிகிதம் 1000 மி.லி., அல்லது கார் போசல்பான் 6 சதவிகிதம் ஜி 16.7 கிலோ அல்லது கார்டேப் ஹைட்ரோ குளோரைடு 50 சதவிகிதம் எஸ்பி 1 கிலோ அல்லது குளோராண்டிரினிலிபுரோல் 18.5 சதவிகிதம் எஸ்சி 150 கிராம் புளு பென்டிமைட் 39.35 சதவீதம் எஸ்சி 50 கிராம் அல்லது தையமீத்தாக்சாம் 25 சதவீதம் டபிள்யூ ஜி 100 கிராம் தெளிக்கலாம். விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ