வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே போல் மதுரை வில்லாபுரம், அவனியாபுரம் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். தெற்குவாசல் முதல் அவனியாபுரம் வரை புதிய மேம்பாலம் வேண்டும். சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடை ஆக்க வேண்டும். முயற்சி செய்யுமா இந்த விடியல் அரசு?
மதுரை: மதுரையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கோரிப்பாளையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், ஆவின் சந்திப்பு,மேலமடை பகுதிகளில் ரவுண்டானா அகலப்படுத்துவது போல, அரசரடி பகுதியிலும் விரைந்து அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்க வேண்டும். மதுரை நகரின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதால் எல்லா ரோடுகளிலும் நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவு அதிகரித்துள்ளது. சைக்கிள்களை காண்பது அரிதாக உள்ளது. சந்திப்புகளில் விரிவாக்கம்
எல்லா பகுதியிலும் நெரிசல் அதிகமாகி, அதனை எளிதாக்க நகருக்குள் பாலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலமுனை ரோடுகள் சந்திப்பு பகுதிகளில் குறுகலான இடங்களில் பக்கவாட்டு கட்டடங்கள், சுவர்களை நெடுஞ்சாலை அதிகாரிகள் இடித்து அகலப்படுத்தி வருகின்றனர். பழங்காநத்தம், ஆரப்பாளையம், செல்லுார், பாத்திமா கல்லுாரி உட்பட பலபகுதிகளில் அகலமான ரவுண்டானாக்கள் அமைத்ததால் அங்கு சிக்னல், போலீசார் தேவையின்றி போக்குவரத்து எளிதாக நடக்கிறது. அதேபோல அரசரடி பகுதியில் 4 ரோடுகள் சந்திக்கும் பகுதியிலும் ரவுண்டானா அமைக்கும் கருத்துரு நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடல் உருவாகி, நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானம் போன்றவற்றுக்காக ரூ.5 கோடிக்கு மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. அதன்பின் ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ., கலெக்டர், நெடுஞ்சாலை அதிகாரிகள் என பலதரப்பினரும் வந்து இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகரின் பசுமை கமிட்டியும் அருகில் உள்ள மரங்களை அகற்ற ஒப்புதல் அளித்து சில மரங்களும் அகற்றப்பட்டன. அருகில் உள்ள மின்வாரிய இடத்தில் உள்ள கட்டடம் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா
இந்த இடத்தில் 40 மீட்டர் அகலத்தில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்து பின்னர் இடமில்லாததால் 20 மீட்டர் அகலத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இதில் சிக்னல் தேவையில்லாத அளவுக்கு வாகனங்களே சுற்றிச் செல்லும் வகையில் ரவுண்டானாவுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இன்று வரை அப்பணி நடைமுறைக்கு வரவில்லை. இதனால் இன்றைய நிலையில் காலை, மாலை வேளைகளில் இந்த சந்திப்பில் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்னலுக்காக காத்துக் கிடக்கின்றன. ரவுண்டானா குறித்து விசாரித்தபோது, இப்பணிக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவரவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல் மதுரை வில்லாபுரம், அவனியாபுரம் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். தெற்குவாசல் முதல் அவனியாபுரம் வரை புதிய மேம்பாலம் வேண்டும். சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடை ஆக்க வேண்டும். முயற்சி செய்யுமா இந்த விடியல் அரசு?