உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரதட்சணை தற்கொலைகள் தொடர் கதையாவது ஏன்; சொத்தும், பணமும், நகையும் தன்னம்பிக்கை தந்து விடாது; மதுரை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி தகவல்

வரதட்சணை தற்கொலைகள் தொடர் கதையாவது ஏன்; சொத்தும், பணமும், நகையும் தன்னம்பிக்கை தந்து விடாது; மதுரை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி தகவல்

மதுரை : தமிழகத்தில் சமீபகாலமாக வரதட்சணை கொடுமைகளால் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. தற்கொலை செய்யும் முன், 'தனக்கென யாருமில்லை என்ற ஒற்றை சிந்தனையும், சுய பச்சாதாபமும்' ஏற்படுவதே முக்கிய காரணம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி.

அவர் கூறியதாவது:

கோழை போல தற்கொலை செய்து கொண்டனர் என நினைப்பது தவறு. அந்த எண்ணம் எப்படி உருவானது என்பதை ஆராய்வதே அவசியம். குட்டியானையை சிறிய கயிற்றில் கட்டி போட்டிருப்பர். வளர்ந்த பின்னும் அந்த கயிற்றில் இருந்து மீளவே முடியாது என்கிற குறுகிய சிந்தனை அந்த யானைக்கு வந்து விடும். இதுபோல இளம்வயதில் வீட்டில் பெற்றோர் கற்றுத் தரும் பாடங்கள் தான் பிள்ளைகளின் மனதில் நிரந்தரமாக பதியும். எந்தப் பொருளை கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்து பழகினால் பின்னாளில் ஏற்படும் மிகச்சிறிய ஏமாற்றத்தையும் பிள்ளைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. தற்கொலை எண்ணம் ஏன் திருமணமான பெண்களுக்கு புகுந்த வீட்டில் எந்தப் பிரச்னை என்றாலும் பேசி தீர்க்க முடியும் என்பதை பெற்றோர் சொல்லித்தர வேண்டும். புகுந்த வீட்டு பிரச்னைகளை சொல்ல வந்தால் 'அனுசரித்துப் போ... இவ்வளவு நகை, பணம் போட்டு பெரிதாக திருமணம் செய்து வைத்துள்ளோம். அவமானப்படுத்தி விடாதே' என்று பெற்றோர் சொல்லும் போது தான் தனக்கென யாரும் உதவிக்கு வரப்போவதில்லை என்கிற எண்ணம் மனதில் மேலோங்கும். புகுந்த வீட்டை விட்டு வெளியேறினால் வேறு போக்கிடம் இல்லை. யாருக்கும் என்மீது அன்பில்லை. இந்த பிரச்னையை மாற்றும் வாய்ப்பே இல்லை. இனி எதிர்காலமே இல்லை என்ற நினைப்பு மனஉளைச்சலை ஏற்படுத்தும். இது தான் தற்கொலை செய்யத் துாண்டுகிறது. தைரியம் தான் சொத்து பணம் மட்டும் தான் பிள்ளைகளுக்கு பிரதான தேவை என பெற்றோர் நினைக்கக்கூடாது. சுயமாக சிந்திக்கவும், உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும் கற்றுத்தர வேண்டும். அதே நேரத்தில் குடும்ப கவுரவம், வீட்டுப்பெருமை, அவமானம் என்ற பெயரில் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை சிதைக்கக்கூடாது. பிள்ளைகளுக்கு நகையும், சொத்தும் சேர்த்து வைத்து கொடுத்தோம் என்று மற்றவர்களிடம் பெருமை பேசுவதில் ஒரு பயனும் இல்லை. வளர்க்கும் போதே தைரியம், தன்னம்பிக்கை, பிரச்னைகளை சமாளிக்கும் விதத்தை கற்றுத்தர வேண்டும். நாம் அனுபவிக்காத சுகத்தை பிள்ளைகளுக்கு தரவேண்டும் என்று நினைப்பதும் தவறு. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப ஒவ்வொரு விஷயமும் மாறுபடும். நம் வாழ்க்கையை பிள்ளைகள் மூலம் வாழ நினைக்கக் கூடாது. அவர்களது பார்வையில் பிரச்னைகளை அணுகுவதற்கும், சிந்திப்பதற்கும் முன்னுரிமை தரவேண்டும். எல்லா பூக்களும் ஒரே நேரத்தில் பூப்பதில்லை. அதற்கான காலம் வரை காத்திருக்க வேண்டும். சிறு சிறு அனுபவங்களின் வாயிலாக தான் பிள்ளைகளும் கற்றுக் கொள்வர். சரியான நேரத்தில் நாம் தரும் ஆலோசனை தான் தற்கொலையில் இருந்து விடுபடுவதற்கான நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை