உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 2014ல் விண்ணப்பித்த மணல் குவாரிக்கு 2023ல் அனுமதி ஏன்: ஐகோர்ட் கேள்வி

2014ல் விண்ணப்பித்த மணல் குவாரிக்கு 2023ல் அனுமதி ஏன்: ஐகோர்ட் கேள்வி

மதுரை: நீர்நிலையில் மணல் குவாரி நடத்த 2014 ல் விண்ணப்பித்தவருக்கு 9 ஆண்டுகளுக்குப் பின் 2023 ல் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வணிக ரீதியான சுரண்டலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் தெற்குமேடு செல்லத்துரை,'குறிப்பிட்ட நீர்நிலையில் மணல் அள்ள ஒருவருக்கு அனுமதித்தது 2023 ல் கலெக்டர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெயமோகன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மணல் அள்ள சம்பந்தப்பட்ட நபர் 2014 ல் விண்ணப்பித்துள்ளார். இவ்விவகாரம் பல ஆண்டுகளாக தீர்வு இன்றி நிலுவையில் இருந்தது. 2023 ல்தான் அனுமதி வழங்கப்பட்டது. கனிமத்தின் தரத்தை உறுதிப்படுத்தாமல், இயந்திரத்தனமாக அனுமதி வழங்க முடியாது. மணல் விற்பனை மற்றும் பொது வினியோக நோக்கத்திற்காக குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார். வேறுவிதமாக கூறுவதானால், தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு விவசாயிக்கு சலுகை அளிப்பதற்கான உத்தரவு இதுவல்ல. மாறாக, வணிக ரீதியான சுரண்டலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில், பொது ஏலம் மூலமே உரிமம் வழங்க முடியும் என ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. அரசியலமைப்பிற்கு முரணாக, தன்னிச்சையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2014 ல் சமர்ப்பித்த விண்ணப்பத்தை 9 ஆண்டுகளுக்குப் பின் 2023 ல் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அனுமதித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ