தருமை ஆதீனம் மணி விழா: மிருகங்களுக்கு பூஜை
மயிலாடுதுறை -: மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் மணிவிழா நவ., 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏழாம் நாளான நேற்று காலை சொக்கநாதர் பூஜையை தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோவில்களில் வழிபாடு நடத்தினார். பின், ஆதீன திருமட வளாகத்தில் தாருகாவனம் சித்தர் பீடம் ஏற்பாட்டில், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுமாடுகள், காளை மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய்கள் என, 60 எண்ணிக்கை மிருகங்களுக்கு கஜ பூஜை, அஸ்வ பூஜை, மிருத்தி பூஜை, அஜ பூஜை, கோ பூஜை, ரிஷப பூஜை, பைரவர் பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளை, குருமகா சன்னிதானம் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். ஒரே மேடையில் தொடர்ந்து, குரு லிங்க சங்கமம் யாகசாலை பூஜையின் 2ம் கால பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. குருமகா சன்னிதானம் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் நடமாடும் சிறப்பு பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லுாரியில் ஏழாம் நாள் மணி விழா மாநாட்டில் நாடு முழுதில் இருந்தும் ஆன்மிக குருமார்கள் 16 பேர் ஒரே மேடையில் அமர்ந்து ஆசி வழங்கினர். மாநாட்டில், பேரூர் ஆதீனம் 25வது குருமஹா சன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் உட்பட 16 பேரும் ஒரே மேடையில், திருவாச்சி அமைப்புடன் கூடிய தனித்தனி பீடத்தில் அமர்ந்து ஆசி வழங்கினர். அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் அருட்பிரசாதங்களை வழங்கினார். நிகழ்ச்சியின் போது, மகா மண்டலேஸ்வரர் சுவாமிகள் மன்மோகன் தாஸ் ஜி மகராஜ் பேசியதாவது: தருமபுரம் ஆதீனம் ஆன்மிக பணி, தமிழ் பணி மற்றும் சமய பணிகளை செய்வதோடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமுதாய சேவை பணிகளை விரிவுபடுத்தி செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதை வட மாநிலங்கள், தென் மாநிலங்களை ஆன்மிக ரீதியாக, கலாசார ரீதியாக, துறவிகளையும், பக்தர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ந்து அயராது பணியாற்றி வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஜகத்குரு என புகழப்படக்கூடியவர். காசி யாத்திரையாக அவர் வட மாநிலம் வரும் போது, கண்டிப்பாக அவருக்கு அனைத்து துறவிகள் மற்றும் மகாமண்டேஸ்வரர் சுவாமிகள் சார்பில் பட்டம் சூட்டி மரியாதை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.