மணல்மேடு ஸ்டேஷனில் கைதி தப்பி ஓட்டம்
மயிலாடுதுறை:மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே சி.புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 32; டிரைவர். இவரது மனைவி கார்த்திகா. திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பிரபாகரன் ராதாநல்லூரில் வசிக்கும் கார்த்திகாவிடம் தகராறு செய்ததுடன், தாக்கியுள்ளார். காயமடைந்த கார்த்திகா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவில் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மாலை பிரபாகரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.