சி.பி.எஸ்.இ., என ஏமாற்றிய பள்ளியை கண்டித்து மறியல்
மயிலாடுதுறை; மயிலாடுதுறை காவிரி நகரில் அழகு ஜோதி அகாடமி வித்யாலயா என்ற தனியார் பள்ளி, 18 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. மாநில கல்வி பாடத்திட்டத்திற்கு அனுமதி பெற்று, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் எனக்கூறி கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதை மாணவர்களின் பெற்றோர் அறிந்தனர். இது குறித்து விளக்கம் கேட்பதற்காக நேற்று முன்தினம் மாலை 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இரவு 7:30 மணிக்கு பிறகும் பள்ளி நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளி முன் மயிலாடுதுறை- - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் தலைமையில் இருதரப்பையும் அழைத்து பேசி தீர்வு காண்பதாக கூறினர்.அதை ஏற்று பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.