மயிலாடுதுறையில் மழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மீனவர்கள் 5வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 500 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் ஆறுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தீவிரபடுத்தியுள்ளார். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.