வானகிரியில் சுனாமி ஒத்திகை
மயிலாடுதுறை: வானகிரியில் சுனாமி ஒத்திகை நடந்தது. அலாரம் அடித்ததும் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்றுவது போன்று தத்துரூபமாக ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களை எவ்வாறு காத்து கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுனாமியில் அதிக உடமைகளையும், உயிர்களையும் இழந்த மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தில் நடந்த ஒத்திகையில், சுனாமி ஏற்படும் போது கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு வெளியிடும் செய்தி அறிந்து தங்களையும், மற்றவர்களையும் எவ்வாறு காத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர பாதுகாப்பு படை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை அலுவலர்களும் களம் இறக்கப்பட்டனர். அப்போது ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து குடியிருப்புகளில் இருந்த மீனவர்கள் அலறி அடித்துக் கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடினர். பின்னர் பேரிடர் மீட்பு படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு முகாம்களுக்கு கொண்டு வந்தனர். இதைப்போல் குடியிருப்பு பகுதியில் சிக்கி கொண்டவர்களையும் மீட்ட மீட்பு குழுவினர் அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்வாறு தத்ரூபமான சுனாமி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் மீனவ கிராமத்தில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.