ஓடாத காருக்கு அபராதம்: ஓய்வு தாசில்தார் புலம்பல்
நாகப்பட்டினம்:நாகையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்திற்கு, காவல் துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து, மொபைல் போனுக்கு தகவல் அனுப்பி வருவதாக ஓய்வுபெற்ற தாசில்தார், உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.நாகையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 65; ஓய்வு பெற்ற தாசில்தார். இவருக்கு சொந்தமான, 'மாருதி டிசையர்' காரை வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார். கடந்த ஜன., 16ம் தேதி, நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் போலீசாரிடம் இருந்து, 'காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், விஜயகுமார் ஓட்டி சென்றதாக, 1,000 ரூபாய் அபராதம்' என ரசீதுடன் கூடிய குறுந்தகவல் வந்துள்ளது.அதே போல், 22ம் தேதி இரவு வேளாங்கண்ணி சாலையில் சென்றதாக, வேளாங்கண்ணி போக்குவரத்து போலீசாரிடம் இருந்து, 1,000 ரூபாய் விதித்து விஜயகுமார், செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.அதிர்ச்சியடைந்த அவர், நாகையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் விபரம் கேட்டுள்ளார். போலீசார் அலட்சியமாக பதிலளித்ததால், உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.விஜயகுமார் கூறுகையில், ''என் காரை வீட்டில் நிறுத்தி வைத்துள்ளேன். எப்போதாவது வெளியில் செல்ல காரை எடுப்போம். வீட்டில் நிறுத்தியிருக்கும் காருக்கு, பொங்கல் பண்டிகையின் போது, திருக்கண்ணபுரம் போலீசாரிடம் இருந்து அபராதம் விதித்து தகவல் வந்தது. தற்போது அதேபோல் வேளாங்கண்ணி போலீசாரிடம் இருந்து அபராதம் விதித்து தகவல் வந்துள்ளது,'' என்றார்.