பைக்குகள் உரசலால் மோதல் வாலிபர் கொலை ; இருவர் கைது
நாகப்பட்டினம்:நாகையில் இரு பைக்குகள் உரசிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்த இரண்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், புதுப்பள்ளியை சேர்ந்தவர் பாலாஜி,24 இவர் வேளாங்கண்ணியில் உள்ள பெட்டிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இதன் அருகிலுள்ள உணவகத்தில், நாகையைச் சேர்ந்த முகேஷ்குமார்,28, என்பவர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலையை முடித்து விட்டு, அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு திரும்பினர்.பிரதாப ராமபுரம் நான்குவழி சந்திப்பில் வந்தப்போது, சாலையின் குறுக்கே புகுந்த சரவணன் என்பவரின் பைக் மீது பாலாஜியின் பைக் லேசாக மோதியது. சரவணன் பைக்கில் ஜெயபால் என்பவர் அமர்ந்திருந்தார். விபத்தை தொடர்ந்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதிக் கொண்டனர். சரவணனும், ஜெயபாலும் அருகில் கிடந்த செங்கற்களால், பாலாஜியையும், முகேஷ் குமாரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பினர்.படுகாயமடைந்த இருவரையும், அவ்வழியே சென்றோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் பாலாஜி இறந்தார். படுகாயத்துடன் முகேஷ் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கொலை செய்த பிரதாப ராமபுரம் சரவணன்,25, ஜெயபால்,23, ஆகியோரை கைது செய்தனர்.