வியாபார நோக்கத்திற்காகவலுக்கட்டாயமாக பயணிகளை பஸ் ஸ்டாண்டிற்குள் இறக்கி விடுவதாக புகார்
வியாபார நோக்கத்திற்காகவலுக்கட்டாயமாக பயணிகளை பஸ் ஸ்டாண்டிற்குள் இறக்கி விடுவதாக புகார்நாமக்கல்:கடைகளின் வியாபார நோக்கத்திற்காக வலுக்கட்டாயமாக, பயணிகளை பஸ் ஸ்டாண்டிற்குள் அனுப்பி வைப்பதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் நகரின் முன்பாக முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டை சுற்றி எந்த வசதிகளும் இல்லை. இதனால், பெரும்பாலான பயணிகள் முதலைப்பட்டி ரவுண்டானாவிலேயே இறங்கி கொள்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்று வந்தால், 20 நிமிடம் காலதாமதம் ஆவதால், பயணிகள் வெளியிலேயே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த, 17 முதல், பஸ்களை ரவுண்டானாவில் நிறுத்தக்கூடாது எனவும், மீறிய பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதமும் விதித்தனர். இதனால், தற்போது அரசு, தனியார் பஸ்கள் எதுவும் முதலைப்பட்டி ரவுண்டானாவில் நிற்பதில்லை. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, ராசிபுரத்தை சேர்ந்த விஸ்நாதன், நாமக்கல் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியிருப்பதாவது: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட், முதலைப்பட்டி ரவுண்டானாவில் இருந்து, 2 கி.மீ., தள்ளி உள்ளது. 6 கி.மீ., துாரத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகர் பகுதி உள்ளது.தற்போது மதுரை, கரூர் பகுதியில் இருந்து வரும் பஸ்களும், பைபாஸ் வழியாக வந்து புதிய பஸ் ஸ்டாண்ட் மட்டுமே வந்தடைய வேண்டும் எனவும், மக்கள் நெருக்கம் மற்றும் புழக்கம் அதிகமுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, ரவுண்டானாவில் இறங்கு பயணிகள், நகர் மற்றும் மற்ற பகுதிகளுக்கு எளிதாக சென்றுவந்தனர். தற்போது பஸ்கள் அங்கு நிற்காததால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள கடைகளின் வணிகத்திற்காக, நாமக்கல் வழியாக செல்லும் ஒவ்வொரு தனி மனிதனின் நேரமும், சுதந்திரமும் பறிக்கப்படுவதாக பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.எந்த இடத்தில் இறங்கி, எந்த இடத்திற்கு எந்த பஸ்சில் செல்ல வேண்டும் என்பது அவரவர்களின் தேவை, நேரம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப தனி மனித விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும். மேலும், வள்ளிபுரம் -கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு நகர் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து எளிதாக பொதுமக்கள் வந்து செல்ல அதிகப்படியான டவுன் பஸ்களை இயக்கை வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.