மாநகராட்சியுடன் இணைத்ததால் பாதிப்பு: காதப்பள்ளி, வீசாணம், லத்துவாடி மக்கள் மனு
மாநகராட்சியுடன் இணைத்ததால் பாதிப்பு: காதப்பள்ளி, வீசாணம், லத்துவாடி மக்கள் மனுநாமக்கல்:'மாநகராட்சியுடன் கிராம பஞ்., இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இணைப்பை தவிர்த்தும், தொடர்ந்து வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காதப்பள்ளி, லத்துவாடி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி கிராம பஞ்., மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக, பாப்பிநாயக்கன்பட்டி, காதப்பள்ளி, சிலுவம்பட்டி, வள்ளிபுரம், தொட்டிப்பட்டி, வகுரம்பட்டி, ரெட்டிப்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், மரூர்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட கிராம பஞ்.,கள் இணைக்கப்பட்டன. இதன் மூலம், அனைத்து வரிகளும் உயர்வதுடன், 100 நாள் வேலை பாதிக்கும் என்பதால், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், காதப்பட்டி, வீசாணம், லத்துவாடி, பாப்பிநாயக்கன்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் ஒன்றியம், காதப்பள்ளி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி மற்றும் மோகனுார் ஒன்றியம், லத்துவாடி கிராம பஞ்.,ல், ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 3,200க்கும் மேற்பட்டோர் அட்டை பெற்று பணியாற்றி வருகிறோம். எங்கள் வாழ்வாதாரமாக இந்த திட்டம் விளங்குகிறது. இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சியுடன், எங்கள் கிராம பஞ்.,கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால், எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதை தவிர்த்து, 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.