உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குறைபாடுள்ள காருக்கு பதில் புதிய காரை வழங்கிரூ.3 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு

குறைபாடுள்ள காருக்கு பதில் புதிய காரை வழங்கிரூ.3 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு

நாமக்கல், :'குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்கி, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தொட்டியபட்டியை சேர்ந்தவர் சரவணகுமார், 43. இவர், 2020 அக்டோபரில், 20 லட்சம் ரூபாய் செலுத்தி, நாமக்கல்லில் உள்ள, 'ட்ரூ சாய் ஒர்க்ஸ்' என்ற கார் டீலரிடம், 'டாடா நெக்ஸான்' கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் வாங்கிய, 26 நாட்களில், பெயின்டிங் குறைபாடு ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சியடைந்த சரவணகுமார், கார் உற்பத்தி நிறுவனத்திற்கு இ--மெயில் மூலம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, கார் அதன் டீலர் மூலம் ரிப்பேர் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்கு பின் கொடுக்கப்பட்டது.மீண்டும் சில நாட்களில், காரின் வெளிப்புறத்தில் பெயின்டிங்கின் தோற்றம் மாற தொடங்கியது. மீண்டும் காரை டீலரிடம் சரவணகுமார் கொடுத்துள்ளார். குறைகளை முழுமையாக சரி செய்யாததால், அதிருப்தியடைந்த சரவணகுமார், காரை டெலிவரி எடுக்காமல், 'குறைபாடுள்ள தன் பழைய காருக்கு பதில், புதிய கார் கொடுக்க வேண்டும்' என, கார் உற்பத்தியாளருக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கார் உற்பத்தி நிறுவனம் மறுத்துவிட்டது.இதையடுத்து, கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும், கார் டீலர் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024 ஜூலையில் சரவணகுமார் வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், புதிய காரில் ஏற்பட்ட பெயின்டிங் குறைபாடுகளை சரி செய்துவிட்டதாக சர்வீஸ் சென்டர் ஒப்புக்கொள்வதன் மூலம், குறைபாடுகளுடன் புதிய கார் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.புதிதாக வாங்கும்போதே பழுதுடன் கார் இருந்துள்ளதால், கார் உற்பத்தி நிறுவனம், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 8 வாரத்துக்குள் அதே வகை புதிய காரை வழங்க வேண்டும். அல்லது வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய பணத்தை, பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.புதிய காரை உற்பத்தியாளர் வழங்கும் வரை, வழக்கு தாக்கல் செய்துள்ளவர் பயன்படுத்த, அவரது பழைய காரை, நன்கு இயங்கும் நிலையில் அவருக்கு வழங்கவும், மன உளைச்சல், சிரமங்களுக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக, கார் உற்பத்தி நிறுவனம், வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை