உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு மறியல் செய்தவர்கள் கைது

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு மறியல் செய்தவர்கள் கைது

குமாரபாளையம்,: கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி, 15 வார்டுகளை கொண்ட பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியை, பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைப்பது குறித்து தமிழக அரசு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தது. மேலும் இணையதளங்கள் வழியாக கருத்துகள் பதிவிடுமாறும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைத்தால், விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாக மாறிவிடும் என்றும், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி அனைத்தும் உயரும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும் என்று பொதுமக்களிடம் தகவல் பரவியது. இதனால் தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்காமல், தனி ஊராட்சியாக நீடிக்க வேண்டும் எனக்கூறி திருச்செங்கோடு குமாரபாளையம் சாலையில், 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி