பெரியசாமி கோவிலில் கட்டணம் வசூல்வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி
பெரியசாமி கோவிலில் கட்டணம் வசூல்வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சிசேந்தமங்கலம்:முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் தரிசனத்திற்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடமும், ஆடு, கோழி பலியிடவும் அறிவிப்பு இல்லாத கட்டணம் வசூலிக்கப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேந்தமங்கலத்தை அடுத்து முத்துக்காப்பட்டி புதுக்கோம்பையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இக்கோவிலுக்கு, தினமும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.அவர்கள், நேர்த்திக்கடன் செலுத்த ஆடு, கோழியை பலியிட்டு பூஜை செய்கின்றனர். மேலும், புதிய வாகனங்கள் வாங்கினால், முதலில் இந்த கோவிலில் பூஜையிட்ட பிறகே எடுத்து செல்கின்றனர். வீட்டு விசேஷங்களின்போது முதல் பத்திரிகையை கோவிலில் வைத்து பூஜை செய்து செல்கின்றனர்.இதுபோல், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், டூவீலருக்கு, 10 ரூபாய், காருக்கு, 20 ரூபாய், லாரிக்கு, 100 ரூபாய் எனவும், ஆடு, கோழி பலியிட, 20 முதல், 50 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், எதற்கு இதுபோன்று கட்டணம் வசூலிக்கின்றனர் என, பக்தர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:கோவிலில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்ட் இருந்தால் கூட கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், கோவிலுக்குள் நுழைவதற்கே கட்டணம் வசூல் செய்கின்றனர்.மேலும், கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள கட்டண விபர பலகையில், வாகனங் களுக்கோ, ஆடு, கோழி பலியிடவோ கட்டணம் வசூலிக்கலாம் என்ற விபரம் இல்லாதபோது, இவ்வாறு பக்தர்களிடம் அடாவடியாக பணம் வசூலிப்பது பகல் கொள்ளையாக உள்ளது. மேலும், கோவிலில் கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.