எருமப்பட்டி, அலங்காநத்தத்தில் செயல்படும் பகுதி நேர நுாலகத்தில் நிற்க கூட இடமில்லாததால், புதிய கட்டடம் கட்டி கொடுக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையிலும், இளைய தலைமுறையினர், இங்குள்ள நுாலகத்துக்கு சென்று புத்தகங்களை வாங்கி படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் படிக்கும் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கு வகையில், 32 ஆண்டுகளுக்கு முன் அரசுப்பள்ளி அருகே, அட்டை கொட்டகையில் பகுதி நேர நுாலகம் கட்டப்பட்டு, 250க்கும் மேற்பட்ட புத்தகங்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டன. இங்கு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள ஆண், பெண் என, 50க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து புத்தகங்களை வாங்கி சென்று படித்து வருகின்றனர். அரசு விடுமுறை, வெள்ளிக்கிழமை நாட்களை தவிர மற்ற நாட்களில், தினமும் காலை, 8:00 முதல், 11:00 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. அப்போது, ஏராளமானோர் வாசித்த புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்து விட்டு, வேறு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மழைக்காலங்களில் இங்குள்ள புத்தகங்களை வைக்க இடமில்லாமலும், புத்தகங்கள் வாங்க வரும் வாசகர்கள் நிற்க கூட இடமில்லாமலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த பகுதி நேர நுாலகத்திற்கு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டி கொடுத்து, கூடுதல் புத்தகங்கள் வழங்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.