இருட்டால் தொடரும் சோகம் விபத்தில் 2 இளைஞர் பலி
மல்லசமுத்திரம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மோர்பாளையம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மாது மகன் அழகர், 23. மோர்பாளையம் அடுத்த தோப்பன்காடு பகுதி துரைசாமி மகன் குணசேகரன், 22, நண்பர்களான இருவரும், திருச்செங்கோட்டில், பழைய இரும்பு கடையில் வேலை செய்தனர். மல்லசமுத்திரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க, 'ஹீரோ ஹோண்டா' டூ-வீலரில், திருச்செங்கோடு - சேலம் மாநில நெடுஞ்சாலையில், பொன்னியாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு இருவரும் சென்றனர். அப்போது விறகுகளை ஏற்றிய, 'ஈச்சர்' லாரி, சாலையைக் கடக்க முயன்றது. போதிய வெளிச்சம் இல்லாததால், எதிர்பாராத விதமாக லாரி டீசல் டேங்க் மீது டூ-வீலர் மோதியது. இதில் அழகர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குணசேகரனும், சிறிது நேரத்தில் இறந்தார். மல்லசமுத்திரம் போலீசார், லாரி டிரைவரான வீராசாமி, 45, என்பவரை கைது செய்தனர்.