லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு 4 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை
நாமக்கல் ?:லாரி டிரைவரிடம், பணம், மொபைல் போன் பறித்த வழக்கில், நான்கு வாலிபர்களுக்கு, தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், குப்புச்சிபாளையம் அடுத்த ஒழுகூர்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 38; லாரி டிரைவரான இவர், 2021ல், நாமக்கல்- புறவழிச்சாலையில் உள்ள பொம்மைக்குட்டைமேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கத்தியை காட்டி மிரட்டிய, நான்கு பேர், 14,500 ரூபாய் ரொக்கம், மொபைல் போனை பறித்து சென்றனர். மேலும், லாரியை கடத்த முயன்ற அவர்களை, நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், களங்காணி கார்த்திக், 20, சோழுடையான்பட்டி ஸ்ரீதரன், 22, நவணி தனத்தம்பட்டி அருள்குமார், 26, செங்கோடம்பாளையம் சூர்யா, 24 என்பது தெரியவந்தது. இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக், ஸ்ரீதரன், அருள்குமார், சூர்யா ஆகிய, நான்கு பேருக்கும், தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.