விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் போனஸ் ஒப்பந்தம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்தாண்டு தீபாவளி போனஸ், 9.75 சதவீதம் வழங்குவதாக உடன்பாடு ஏற்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை, கடந்த, 24ல் தொடங்கியது. பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் இரு தரப்பில் இருந்து நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். முதல்கட்ட பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கத்தினர், 20 சதவீதம் போனஸ் கேட்டு வலியுறுத்தினர். ஆனால், உரிமையாளர் சங்கத்தினர், '9.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக' கூறினர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. 2ம் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த, 27ல் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி வரை நடந்தது.இதில், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்தாண்டு தீபாவளி போனஸ், 9.75 சதவீதம் என உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமானது. புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக, 2,000 ரூபாய் வரை கிடைக்கும்.