தரமான விதை பயன்படுத்த அறிவுரை
நாமக்கல், 'விவசாயிகள் பரிசோதனை செய்த தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்' என, நாமக்கல் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் ரஞ்சிதா, தேவிப்பிரியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது விதைகளாகும். தரமான விதை உபயோகிப்பது மிக முக்கியம். தரமான விதை என்பது நல்ல முளைப்புத்திறன் உடையதாகவும், பிற ரகங்கள் கலப்படம் இல்லாமலும் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் உடையதாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமலும் இருக்க வேண்டும். உழவர் பெருமக்கள் தங்கள் விளை நிலங்களில் இருந்து பெறப்பட்ட தானிய வகை விதைகள் மற்றும் பயறு வகை விதைகள், எண்ணெய் வித்து போன்ற விதைகளை விதைக்காக சேமிக்கும்போது, அதன் தரத்தை அறிந்து சேமிக்க வேண்டும். விதையின் தரம் தெரிந்து விதைத்தால் மட்டுமே உரிய பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக லாபம் கிடைக்கும். இதற்கான பரிசோதனைகள், விதைப்பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நாம் உபயோகிக்கும் விதைகளுக்கு பயிர் வாரியாக தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேமித்து வைக்கப்பட்ட விதைகளாயினும் விதைக்கு முன் விதைப்பரிசோதனை செய்து விதைப்பது சிறந்த முறையாகும்.எனவே, விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும் உற்பத்தி செய்யும் உண்மை நிலை விதைகளையும் விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து, தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். நாமக்கல் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கட்டடத்தில் அறை எண். 13ல் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில், ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி விதை தரத்தை அறிந்து பயனடையலாம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.