கடன் கேட்டவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
ப.வேலுார்: ஜேடர்பாளையம் அருகே, கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 70; விவசாயி. பரமத்தியை சேர்ந்தவர் ஜெகதீசன், 45, பரமத்தியில் சலுான் கடை வைத்துள்ளார். இவர் சொந்த தேவைக்காக, ராமலிங்கத்திடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஜெகதீசன் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த கட்டட மேஸ்திரி வேல்முருகன், 35, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் மாலை, கபிலர்மலை கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராமலிங்கம், கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கத்திற்கு மண்டை உடைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார், ஜெகதீசன், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.