ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா
மோகனுார், ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில் நடந்த, 25ம் ஆண்டு வளைகாப்பு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மோகனுார், ராசிபாளையம் பஞ்., மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் சங்க பாலநாகராஜர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி வெள்ளிக்கிழமை, வளைகாப்பு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஆடி நான்காம் வெள்ளியான நேற்று, 25ம் ஆண்டாக, ராஜநாகலட்சுமி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அபிஷேகம், 10:30 மணிக்கு, சுமங்கலி பூஜை, 11:00 மணிக்கு வளைகாப்பு, மதியம், 12:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, மஞ்சள், குஞ்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டு, ஐந்து வகையான உணவு பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.* ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், 50 கிலோ சாதத்தில் அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. அன்னபூரணி அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால், ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கலாம் என்பதால், நேற்று மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.* மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில், காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குங்குமம், திருமஞ்சனம், வேப்பிலை வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.* சேந்தமங்கலம், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி, பெரிய மாரியம்மன், தேவி கருமாரியம்மன், பத்திர காளியம்மன் கோவில்களில், பால், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டது.* வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.* திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில், இரண்டு லட்சம் வளையல்கள் கொண்டு, கர்பரட்சாம்பிகை அலங்காரம் செய்யபட்டது. பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து, ஐந்து வகையான உணவு பரிமாறப்பட்டது.* நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் வள்ளலார் அன்னதான அறக்கட்டளை மற்றும் மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில், நேற்று மாலை, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விளக்கு ஏற்றி மாரியம்மனுக்கு, 1,008 மந்திரங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக மதியம் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.* குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா, கணபதி பூஜையுடன் நேற்று துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேளதாளம் முழங்க, பெண் பக்தர்கள் தீர்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தோஷி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சகிலா அம்மையார் செய்திருந்தார்.