கல்லுாரி மாணவர் கொலையில்நாமக்கல்லில் சிறுவர்கள் கைது
நாமக்கல்:நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரேம்குமார் மகன் மனோ, 19; பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவன். கடந்த, 28 மாலை வீட்டை விட்டு வெளியேறிய மனோ, மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், முல்லை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பகுதி, 'சிசிடிவி' கேமராக்களை நாமக்கல் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், மனோவை டூவீலரில் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.அவர்களை பிடிக்க, ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தேடி வந்த போலீசார், நேற்று மாலை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். சிறுவர்களில் ஒருவரின், 15 வயது தங்கையை மனோ கேலி, கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் மனோவை நைசாக பேசி அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.