த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை
கரூர், கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பொது மக்கள், கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட, 306 பேருக்கு சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 2 முதல் கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த, 15 போலீசார் விசாரணைக்காக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில், பாதுகாப்பு பணிகள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.