கோவை மண்டல அளவில் முதல்வர் கோப்பை வாள் விளையாட்டு: 265 வீரர்கள் பங்கேற்பு
நாமக்கல், கோவை மண்டல அளவிலான முதல்வர் கோப்பை வாள் விளையாட்டு போட்டியை, கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். ஆறு மாவட்டங்களை சேர்ந்த, 265 வீரர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி, கடந்த, 22ல் துவங்கி, வரும், 12ல் முடிகிறது. ஐந்து பிரிவுகளில், 178 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 26ல் போட்டிகள் துவங்கின. இந்நிலையில், கோவை மண்டல அளவிலான, முதல்வர் கோப்பை வாள் விளையாட்டு போட்டி நேற்று துவங்கியது. பள்ளி, கல்லுாரியை சேர்ந்த ஆண்கள் பிரிவினர் பங்கேற்றனர். இன்று, பள்ளி, கல்லுாரியை சேர்ந்த பெண்கள் பிரிவினருக்கு நடக்கிறது.இதில், நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் நீல்கிரீஸ் ஆகிய, ஆறு மாவட்டங்களில் இருந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த, 265 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா, பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.