புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரியகுளம் ஊராட்சி, பட்டத்தயான் குட்டை கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில், பயிர் சேதம் குறித்து கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில், 10 ஏக்கரில் நான்கு விவசாயிகள் நெற்பயிர், 12 ஏக்கரில் ஏழு விவசாயிகள் பருத்தி மற்றும் 3.5 ஏக்கரில் இரு விவசாயிகள் கரும்பு பயிர் என மொத்தம், 25.5 ஏக்கரில் பயிர் சாகுபடி மேற்கொண்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். மேலும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பெரியகுளம் தடுப்பணை மற்றும் பழையபாளையம் ஏரியில் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதையும், கரையோர, தாழ்வான பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நீர் பிடிப்பு பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீர் வரத்து உள்ளிட்ட விபரங்களை நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம்புதுார் ஊராட்சி, தோட்டம் உடையான்பட்டி கிராமத்தில், 10 விவசாயிகள், 12.86 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் மழையால் சேதமடைந்துள்ளதை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி, துணை இயக்குனர் கவிதா, தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி உடனிருந்தனர்.