கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை
நாமக்கல்; நாமக்கல்லில், கல்லுாரி மாணவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், முல்லை நகர் சாலையோரம், நேற்று காலை, 22 வயது வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை நடத்தினர். நாமக்கல் எஸ்.பி., விமலா, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அந்த வாலிபரின் கழுத்து, கண்ணம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. வாலிபரின் உடல் அருகே கிடந்த வாட்ச், காலணி, மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர் விசாரணையில், கொலை செய்யப் பட்டவர் நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மனோ, 19, என்பதும், நாமக்கல் அருகே தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.