சிபில் ஸ்கோர் பார்த்து பயிர் கடன் வழங்குவதை ரத்து செய்ய கோரிக்கை
நாமக்கல்: 'தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 'சிபில் ஸ்கோர்' பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும்' என்ற முறையை, தமிழக முதல்வர் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மாநில பதிவாளர், 'விவசாயிகள் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) மூலம், பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு, விவசாயிகளின், 'சிபில் ஸ்கோர்' பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.விவசாயிகள், விவசாய மூலதன கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்களுக்கும், கல்வி கடன், நகை கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று, விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாமலும், அவற்றை செலுத்த முடியாத நிலையில், 'சிபில் ஸ்கோர்' என்ற பிரச்னையில் சிக்கியுள்ளதால், கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும், 'சிபில் ஸ்கோர்' பதிவேற்றம் செய்யப்படும்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய கடன்களுக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின், 'சிபில் ஸ்கோரில்' இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் கொடுப்பதற்கு, 'சிபில் ஸ்கோர்' பார்க்க வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே விவசாய உற்பத்தியில் பின்னடைவில் இருக்கும் தமிழகத்தில், மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், தமிழக முதல்வர், கூட்டுறவு துறையின் இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.