பூட்டியுள்ள கொங்கு திருப்பதி கோவில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் கொங்கு திருப்பதி கோவில், 20 ஆண்டுக்கும் மேலாக உள்ளது. நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட மக்கள் தரிசனம் செய்ய வருவர். புரட்டாசி சனிக்கிழமையில், ஏராளமானோர் வந்து செல்வர். இக்கோவில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டபட்டுள்ளதால், கோவில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும். ஏலம் யாரும் எடுக்காவிட்டால், அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம், கடந்தாண்டு மார்சில் தீர்ப்பு வெளியிட்டது.இதையடுத்த, கொங்கு திருப்பதி கோவிலை, ஈரோடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர். அதை தொடர்ந்து கோவில் முன்புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக, இந்த கொங்கு திருப்பதி கோவில் பூட்டப்பட்டு கிடக்கிறது. நேற்று புரட்டாசி முதல் சனிகிழமை என்பதால், ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்தனர். கோவிலின் முன் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டிருந்ததால், வெளியே இருந்தே மக்கள் தரிசனம் செய்தனர்.