விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு விரைந்து வழங்க இயக்குனர் உத்தரவு
ராசிபுரம்: 'விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும்' என, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புதுச்சத்திரம் வட்டாரம், நவனி கிராமத்தில் விவசாயி ரவி வயலில் மானிய திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டு நீர் பாசன அமைப்பை பார்வையிட்டார். பின், கீழ் சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயி துரைசாமி வயலில் சொட்டு நீர் பாசனம் மூலம், சேனைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட வயலை ஆய்வு செய்து சேனைக்கிழங்கு பயிரிடும் முறை குறித்தும், விற்பனை சந்தை வாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தோட்டக்கலை துணை இயக்குனர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கள ஆய்விற்கு பின், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூட்ட அரங்கில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறை அனைத்து நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தில் பழச்செடி தொகுப்பு பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அனைத்து மானிய திட்டங்களுக்கான பயனாளிகளை கண்டறிந்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.