உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அமலுக்கு வந்த தேர்தல் விதி: ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு

அமலுக்கு வந்த தேர்தல் விதி: ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு

நாமக்கல்: ''நாமக்கல்லில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில் பறக்கும்படை உள்பட, 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 68 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா கூறினார்.லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம், நேற்று வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார்.கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி புகைப்படங்களை அகற்றுதல், தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினரின் பணிகள், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைப்படி விளக்கப்பட்டது.தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.அப்போது, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கும், 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் என, மொத்தம், 42 குழுவினர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அக்குழுவினர், தினமும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றுவர். தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் பொதுவான புகார்களுக்கு, '1800-425-721' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அதற்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், 50,000 ரூபாய் வரை, எவ்வித கட்டுப்பாடும் இன்றி பொதுமக்கள் எடுத்துச் செல்லலாம்.

பதற்றமான ஓட்டுச்சாவடிகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், 1,660 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 68 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி