உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைக்காயை பழுக்க வைக்க எத்திலின் ரசாயனம்: ப.வேலுாரில் அடாவடி

வாழைக்காயை பழுக்க வைக்க எத்திலின் ரசாயனம்: ப.வேலுாரில் அடாவடி

ப.வேலுார்:சுப முகூர்த்த நாட்களையொட்டி வாழைப்பழம் தேவை அதிகரிப்பதால், ப.வேலுார் பகுதியில் வாழைத்தார் மீது, 'எத்திலின்' ரசாயனம் தெளித்து, அரை மணி நேரத்தில் பழுக்க வைத்து, விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்று வட்டாரப் பகுதிகளான, ப.வேலுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, நன்செய் இடையாறு பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள தினசரி வாழைத்தார் ஏல சந்தைக்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், போட்டி போட்டு வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு, உடனடியாக வாழைப்பழங்களை கேட்கும் மக்களுக்கு, பழுக்காத வாழைத்தார்கள் மீது எத்திலின் ரசாயனம் தெளித்து, அரை மணி நேரத்தில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து, வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது: புகை போட்டு பழுக்க வைத்தால், தேவைக்கேற்ப கொடுக்க முடியாது. அதே நேரம் சில மணி நேரங்களில் எவ்வளவு தேவையோ அதற்கேற்றார் போல் பழுக்க வைக்கும் அளவிற்கு ரசாயனம் தடவி பழுக்க வைக்க முடியும். இயற்கையாக பழுத்த வாழைப்பழம் காம்பு வரை மஞ்சள் நிறத்துடன் இருக்கும். ரசாயன ஸ்பிரே செய்த வாழைப்பழம், மஞ்சள் நிறத்துடனும், அதனுடைய காம்பு பச்சை நிறத்துடனும் இருக்கும். இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். மழைக்காலங்களில் காற்றுக்கு முறிந்துபோகும் வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்கள் பெரும்பாலும் பழுக்காது. அவற்றை ரசாயனம் தெளித்தே பழுக்க வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயங்கர விளைவுகள் ப.வேலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி கூறியதாவது: வாழைத்தார்களை, கார்பைட் கல் மற்றும் ரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்க கூடாது. கால்சியம் கார்பைட் போன்ற வேதி பொருட்களின் விளைவுகள் மிக பயங்கரமானவை. குறிப்பாக, 'எத்திலின்' ரசாயன கலவையை பயன்படுத்தி பழுக்க வைக்க கூடாது என, வாழைத்தார் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் பலமுறை அறிவித்துள்ளோம். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரசாயனம் கலந்த தண்ணீரை ஸ்பிரே செய்து அதன் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைக்க கூடாது. அது உடல் நலத்துக்கு கேடானது. ஆய்வில் கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை