முன் மாதிரியான சேவை விருது: குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல், 'முன் மாதிரியான சேவை விருது பெறுவதற்கு, குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கீழ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில், குழந்தைகளின் நலனை பேணி காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு, 'முன்மாதிரியான சேவை விருதுகள்' நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.மேற்படி, 'முன்மாதிரியான சேவை விருதுகள்' அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், ஒரு லட்சம் ரூபாய், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், ஒரு லட்சம் ரூபாய், சட்டத்திற்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கான குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், ஒரு லட்சம் ரூபாய், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள்-, ஒரு லட்சம் ரூபாய் என, நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.விருது பெறுவதற்கு, பதிவு மற்றும் உரிமம், நிர்வாகம் மற்றும் மேலாண்மை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு செயல்பாடுகள், உட்புற கட்டமைப்பு, சிறந்த நடைமுறைகள் மற்றும் சமூக அடிப்படையிலான சேவைகளுக்கு வழங்கப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு, 'முன்மாதிரியான சேவை விருதுகள்' ஆண்டு தோறும், குழந்தைகள் தினமான நவ., 14ல் வழங்கப்படும்.நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், தகுதிகளின் அடிப்படையில் விருதுகள் பெறுவதற்கு, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 320, 3வது தளம், கலெக்டர் அலுவலகம், நாமக்கல்--637003' என்ற முகவரியில், வரும், 8 மாலை, 5:30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவே முழு அளவிலான கருத்துருவுடன் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.