உழவர் சந்தை புதிய நடைமுறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
நாமக்கல்: உழவர் சந்தையில் பின்பற்றப்படும், புதிய நடைமுறை குறித்து வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். நாமக்கல் அடுத்த, தும்மங்குறிச்சி விவசாயி ஈஸ்வரி நடேசன் தோட்டத்தில், உழவர் சந்தை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உழவர்சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்தார். உழவர் சந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் புதிய அடையாள அட்டை பெற்றிட தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கினார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள அட்டையை புதியதாக வழங்கும் நடை முறை குறித்து கூறினார். மேலும், கூட்டத்தில் விவசாய கடன் கேட்ட விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளித்தார். உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல், அதிகாலை வெளி மார்க்கெட் காய்கறிகள் விலை விபரம் சேகரித்தல், உழவர் சந்தை காய்கறிகள் விலை நிர்ணயிக்கும் முறை பற்றி விரிவாக தெரிவித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், காய்கறிகள் வரத்தை பதிவு செய்தல், இலவச பஸ் வசதி, கடை குலுக்கலில் ஒதுக்கீடு செய்யும் முறை, உழவர் சந்தை வளாகத்தினை சுத்தமாக வைத்திருத்தல் பற்றி கூறினார்.