அரசு அறிவித்த விலையை கரும்புக்கு வழங்கக்கோரி பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பள்ளிப்பாளையம், ஜன. 4-பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, களியனுார், கரமேடு, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் விவாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, தமிழக அரசு சார்பில் ஒரு கரும்பிற்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள், கரும்புக்கு அரசு அறிவித்த விலையை தருவதில்லை. கடந்தாண்டு ஒரு கரும்புக்கு அரசு, 33 ரூபாய் விலை கொடுத்தது. அதிகாரிகள் ஒரு கரும்புக்கு, 21 ரூபாய் தான் கொடுத்தனர். இதுகுறித்து கேட்டால், 'ஆட்கூலி, வண்டி வாடகை' என, தெரிவித்து பணத்தை பிடித்து கொள்ளுகின்றனர். மேலும், 400 கரும்புகளுக்கு, 40 கரும்புகளை இலவசமாக அதிகாரிகள் வாங்குகின்றனர். கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடக்கிறது. இந்தாண்டு அரசு அறிவித்த ஒரு கரும்பின் விலையான, 35 ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும். கரும்பு கொள்முதலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என, சமயசங்கிலி பகுதி கரும்பு விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று கரும்பு கொள்முதலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, சமயசங்கிலி பஞ்., அலுவலகத்தில், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., மல்லிகா தலைமையில் பேச்சுவார்த்ததை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையறிந்த விவசாயிகள் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து விவசாயிகளிலும் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, சமயசங்கிலி பகுதி விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு ஒரு கரும்புக்கு, 23 ரூபாய் வழங்கப்படும். மீதியுள்ள, 12 ரூபாய் வண்டி வாடகை, ஆட்கள் கூலிக்கு என, அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளனர். இன்றிலிருந்து அதிகாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். இதில், 400 கரும்புகளுக்கு, 40 கரும்புகளை இலவசமாக தரமாட்டோம் என, தெரிவித்துவிட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.