ஏரியில் சோலார் பேனல் அகற்ற உத்தரவு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் ஆட்டையாங்குட்டை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், சோலார் பேனல் அமைத்து மோட்டார் மூலம், 70 குடும்பத்தை சேர்ந்த விவசாயிகள் நீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், சோலார் பேனலை அகற்ற நிதிமன்றம் உத்தரவிட்டது. இதை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநில சட்ட ஆலோசகர்- வக்கீல் செந்தில்குமார் தலைமையில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில சட்ட ஆலோசகர்- வக்கீல் செந்தில்குமார் கூறியதாவது:ஆட்டையாங்குட்டை ஏரிக்கு, இயற்கையாக வந்த அணை வாய்க்கால் நீர் தடைபட்டது. இதனால் தண்ணீர் வரத்தின்றி ஏரி வறண்டது. இந்த சூழ்நிலையில் சுற்றுப்பகுதியில் உள்ள, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து, 10 லட்சம் ரூபாய் செலவு செய்து, சோலார் மின்சக்தி அமைப்பை உருவாக்கி, ஏரிக்கு செயற்கை முறையில் தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், இந்த சோலார் மின்சக்தி என்பது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு, சோலார் பேனல்களை அகற்ற உத்தரவிட்டது. சேலார் பேனலை அகற்றும்பட்சத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொதுமக்களுக்கான நீர்வள ஆதாரமும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, சோலார் பேனலை நிறுவப்பட்ட இடத்திலேயே இருக்க அனுமதி வழங்கி, நீரேற்றம் செய்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என, உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.வரும், 12க்குள் சோலார் பேனலை அகற்றிக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, ராசிபுரம் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு மற்றும் போலீசார், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'நீதிமன்றத்திற்கு சென்று சோலார் பேனல் அதே இடத்தில் பயன்படுத்திக்கொள்ள உத்தரவு பெற்று வரவேண்டும். இல்லை என்றால் மாற்று இடத்தில் நிறுவிக்கொள்ள வேண்டும்' என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இரவு, 8:00 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.