குண்டுமல்லி பூ வரத்து அதிகரிப்பு விலை சரிவால் விவசாயிகள் கவலை
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், குண்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். குளிர்காலத்தில் பூக்கள் விளைச்சல் குறைந்ததால், கடந்த மாசியில் குண்டுமல்லி ஒரு கிலோ, 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் கோடைகாலம் தொடங்கியதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பூ சந்தைக்கு, எருமப்பட்டி பகுதியில் இருந்து அதிகளவில் பூக்கள் வரத்தானது. பூக்கள் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், போதிய விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, பூ விவசாயி மணி கூறியதாவது: எருமப்பட்டியில், கடந்த மாசி மாதம் அதிக பனிப்பொழிவால், இரண்டு டன் குண்டுமல்லி கூட வரவில்லை. ஆனால், சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருவதால், பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தற்போது வரை, ஐந்து டன் பூக்கள் ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று முன்தினம் ஒரு கிலோ குண்டுமல்லி, 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 300 ரூபாய்க்கு விற்பனையானது. விலை கட்டுப்படியாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.