ரூ.41 கோடியில் மினி டைடல் பார்க் ராசிபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆண்ட களூர்கேட் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மினி டைடல் பார்க் அமைய உள்ளது. இந்நிலையில் டைடல் பார்க்க அமைய உள்ள இடத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் பார்வையிட்டார்.அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராசிபுரத்தில், 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் அமைக்க, நாளை(இன்று) முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். மினி டைடல் பார்க்க மூலம், 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைவர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த டைடல் பார்க் அமைகிறது. கோவை, திருச்சி, பெங்களூரு ஏர்போர்ட்டுக்கு செல்ல வசதியாக தேசிய நெடுஞ்சாலையில் டைடல் பார்க் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டது. 64,000 சதுரடி பரப்பளவில், மூன்று அடுக்கில் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் கல்லுாரியில் படிக்கும் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் முக்கியமாக ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் பயன்பெறுவர். 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு வரவுள்ளன. முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறுவதுபோல், டைடல் பார்க் அமைவதால் கல்லுாரிக்கு எந்த பாதிப்பும்இல்லை. கல்லுாரிக்கு, 40 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது, 4 ஏக்கர் பரப்பளவில் தான் கல்லுாரி கட்டடம் உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தான் டைடல் பார்க் அமைக்கவுள்ளோம். மீதி, 30 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கல்லுாரி நுழைவு வாயில் ராசிபுரம் சாலையில் உள்ளது. டைடல் பார்க் சுற்றுச்சுவர் வசதியுடன் பாதுகாப்பாக அமைக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாணவர் அணி சத்தியசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.