ஆடு திருடியவர்கள் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி உஷா, 53; ஆடு, மாடு பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, கேட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை பட்டியை கூட்ட சென்றபோது, 25,000 ரூபாய் மதிப்புள்ள, இரண்டு ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து உஷா, நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் விசாரித்ததில், ஆடுகளை 2 வாலிபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மேலும், அடையாளங்களை வைத்து விசாரித்த போது, நாமகிரிப்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார், 27, நாமகிரிப்பேட்டை யூனியன் ஆபிஸ் எதிரே வசிக்கும் ரவி மகன் சூர்யா, 23 என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆட்டை மீட்டதுடன் இருவரையும் நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.